எதிர்வரும் வாரத்தில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கோதுமை மாவு கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும் அவற்றை இறக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கோதுமைமாவு தொடர்பில் பாரிய பிரச்சினை இருப்பதை தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்த நளின் பெர்னாண்டோ, இந்த நாட்டில் கோதுமை மாவை விநியோகிக்கும் இரண்டு பிரதான நிறுவனங்களும் டொலர் பற்றாக்குறையினால் போதியளவு கோதுமை தானியங்களை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன் பின்னர் இந்தியாவில் இருந்து கோதுமை மாவை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டதாகவும், இறக்குமதியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மாவின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் உரையாற்றிய ரோஹன பண்டார, பொதி செய்யப்பட்ட கோதுமை மாவின் விலை கிலோ ஒன்று 450 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.