Wednesday, January 15, 2025

பொன்னியின் செல்வன்’ பாகம் 1 – ஒரு பார்வை 

தமிழுணர்ந்தோர் மனங்களிலும், கலைப்பிரியர்களின் மெய்யுணர்விலும் இன்றைய தினங்களில் பேசுபொருளாக இருப்பது, ‘பொன்னியின் செல்வன்’ நாவலும் அதே பெயரில் மணிரத்னம் இயக்கி, வெற்றிகரமாக திரையிடப்பட்டு வரும் திரைப்படமுமே ஆகும்.

67 ஆண்டுகளுக்கு முன் 1950 தொடக்கம் 1955 வரையான காலங்களில் அமரர் ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆனந்த விகடன் வார சஞ்சிகையில் தனது பொன்னெழுத்துக்களால் பத்தாம் நூற்றாண்டில் இடம்பெற்றதாக கூறப்படும் சோழர்களின் வரலாற்றினையும், சோழ சாம்ராஜ்ஜியத்தில் நடந்த சில சரித்திர நிகழ்வுகளையும் கற்பனை கலந்து, பாமரனுக்கும் புரியும் விதமாக, எளிய தமிழ் நடையில் வடிக்கப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவல் திரைப்பட வடிவில் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி வெளியானது.

சுமார் 2600 பக்கங்களுக்கு மேலான 57, 53, 46, 45, 91 அத்தியாயங்களில், ஐந்து பாகங்களில் வெளியான இந்நாவலின் நீண்ட பெருங்கதையை சுமார் நாற்பதுக்கும் அதிகமான கதாபாத்திரங்களைக் கொண்ட சரித்திரத் தொடரை இரண்டு பாகங்களில், ஐந்தரை மணித்தியாலங்களில் திரை வடிவில் கொண்டு வருவதென்பது பகீரத பிரயத்தனமாகும். சில வரிகளில் சிலவற்றை விமர்சித்துவிடலாம். எனினும், இப்படத்தின் படைப்பாளிகளின் கடுமையான உழைப்புக்கு ஒவ்வொரு ரசிகனும் கௌரவமும் பாராட்டுக்களையும் வழங்குவது மிக முக்கியமாகும்.

கலை வண்ணங்களுக்கும் கலை எண்ணங்களுக்கும் கலை நயங்களுக்கும் கலைஞர்களுக்கும், குறிப்பாக, இச்சரித்திரப் படைப்பின் மூலவரான ‘கல்கி’ அவர்களின் தமிழுக்கும் நாம் மதிப்பளிப்பது அவசியம். அந்த வகையில் பொன்னியின் செல்வனை திரைவடிவில் செதுக்கிய சினிமா சிற்பிகளுக்கு முதல் பாராட்டுகள்!

நாவலை வாசித்து பூரிப்படைந்த ரசிகர்களின் மனதில் வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், ஆழ்வார்க்கடியான் நம்பி, நந்தினி, குந்தவை, வானதி, பூங்குழலி, பழுவேட்டரையர்கள், சுந்தர சோழன் எல்லோரும் எப்படி இருந்திருப்பார்கள் எனவும், தஞ்சை அரண்மனை, பழையாறை, கடம்பூர், ஈழ நாடு, வீராணம் ஏரி, கோடிக்கரை, காவேரிக்கரை, பழுவூர் மற்றும் சோழ சாம்ராஜ்ஜிய நகரங்களும் அவற்றின் அமைப்புகளும் எவ்வாறு இருந்திருக்கும் என்ற கற்பனைகளுக்கு இப்படத்தில் தத்ரூபமாக திரைவடிவம் கொடுத்த பெருமை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணியையே சாரும். அத்துடன் ஐஸ்வர்யா ராய், த்ரிஷாவை தங்கப் பதுமைகளாக பார்க்க முடிகிறது. ஏனைய நடிகர்களின் ஒப்பனைகளையும் ஆடை அணிகலன்களையும் சோழர் கால கலாசார அடிப்படையில் அமைத்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

சரித்திரப் படத்துக்கான பின்னணி இசையை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அமைக்க தவறிவிட்டதாக ரசிகர்களின் தரப்பில் பேசப்படுகிறது. அதற்கு சாட்சியாக ‘பொன்னி நதி’ என்ற பாடல் மட்டுமே செவிகளை எட்டுகின்றது. பழைய சரித்திரப் படங்களில் பாடல்களின் வரிகளை ரசிகர்களின் மனதிலும் காதுகளிலும் பதியும் வண்ணம் பாடியிருப்பார்கள், அன்றைய பின்னணிப் பாடகர்கள். பின்னணி இசையும் அமைதியாக பின்தொடரும். வழமை போல் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வாத்தியக்கருவிகளின் ஒலிகளுக்கே முக்கியத்துவம் வழங்கியுள்ளார் என்றே கூறவேண்டும்.

பொன்னியின் செல்வனை விழிகளுக்கு விருந்தாக கொடுத்த ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பெரும் பாராட்டுக்குரியவர். பல கட்டங்களில் சோழ சாம்ராஜ்ஜியத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுள்ளார். ஒவ்வொரு நடிகர்களும் தங்களது பாத்திரங்களை நன்கு உள்வாங்கிக்கொண்டு வியாபித்திருப்பது படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறி நிற்கின்றது. ஐஸ்வர்யா ராய், த்ரிஷா தோன்றும் அழகு நிறைந்த காட்சிகளை ரசிகைகளே வாய் பிளக்கும் வண்ணம் அமைந்திருப்பது மெய்யே.

ஈழ நாட்டுக் கடலில், கப்பலில் நடக்கும் யுத்தத்தை சண்டைப் பயிற்சி இயக்குநர்களும் ஒளிப்பதிவாளரும் படமாக்கிய விதம் ஹொலிவுட் படங்களுக்கு நிகராக அமைந்தமை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இளங்கோ குமரவேல், பி.ஜெயமோகன் போன்ற கதாசிரியர்களின் உதவியுடன் திரைக்கதை வசனம் அமைத்துள்ளார், இயக்குநர் மணிரத்னம்.

அக்கால சரித்திர படங்களுக்கு வசனம் எழுதிய பழம்பெரும் வசனகர்த்தாக்களான இளங்கோ, கலைஞர் கருணாநிதி, கவியரசு கண்ணதாசன், சக்தி ஆர்.கிருஷ்ணசாமி, ஆர்.கே.சண்முகம், தஞ்சை ராமையாதாஸ், ஏ.பி.நாகராஜன் போன்ற ஜாம்பவான்கள் எழுதிய உணர்ச்சி மிகு வசனங்களை ரசிகர்கள் இப்படத்தில் எதிர்பார்த்தால், அது நிச்சயமாக ஏமாற்றத்தையே தரும்.

கல்கி தனது நூலில் எளிய நடையில் கதைக்களத்தை அமைத்திருந்தாலும், திரைப்படத்தில் வசனங்களை சற்று மேம்படுத்தியிருக்கலாம். இத்திரைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் உலக மகா நடிப்புக் கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நினைத்து பார்த்திருப்பர். சிவாஜி உயிருடன் இருப்பின், சுந்தர சோழன் வேடத்தில் அசத்தியிருப்பார். அவ்வகையில் சிவாஜி கணேசன் குடும்பத்தினருக்கும் இப்படத்தில் மணிரத்னம் வாய்ப்பளித்துள்ளார். பெரிய வேலர் பூதி விக்ரமகேசரியாக இளைய திலகம் பிரபுவும், பார்த்திபேந்திர பல்லவராக விக்ரம் பிரபுவும் சிறு காட்சிகளில் வந்து செல்கின்றனர்.

ஆதித்த கரிகாலன் வேடத்துக்கு சீயான் விக்ரம் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இக்காவியப் படைப்பில் நட்சத்திரத் தெரிவுகள் மிக நேர்த்தியாக இடம்பெற்றுள்ளது.

ஆரம்ப காட்சிகளில் மேக மூட்டங்களுக்கு மத்தியில் குதிரையில் அமர்ந்தவாறு விக்ரம் தோன்றும்போது காட்சி வீர பிரதாபம் கொண்டது. வீரனாகவும், விவேகியாகவும், சில நேரங்களில் சகுனியாகவும், நகைச்சுவையாளனாகவும் தோன்றும் வந்தியத்தேவன் வேடத்துக்கு கனகச்சிதமான தெரிவு கார்த்தி.

இளவரசன் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி ஏற்ற பாத்திரம் அபாரம். மேலும், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், லால், மோகன் ராம், ஜெயசித்ரா போன்ற நட்சத்திரங்களை தெரிவு செய்ததில் இயக்குநரின் சினிமா அனுபவம் நன்கு பளிச்சிடுகின்றது. குறிப்பாக நந்தினி, குந்தவை, பூங்குழலி, வானதி, ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன், பெரிய சிறிய பழுவேட்டரையர்கள், ஆழ்வார்க்கடியான் நம்பி போன்ற பாத்திரங்களில் நடித்துள்ள கலைஞர்கள் தெரிவு மிக அருமை. மலையாள நடிகர் ஜெயராம் ஏற்ற ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற வைணவ ஆழ்வார் வேடம் அற்புதம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சற்று இருட்டிய நிலையில் காணப்படுவதை சற்று குறைத்திருக்கலாம்.

பலர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படத்தையும், ‘பொன்னியின் செல்வனை’யும் வேறுபடுத்தி கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

பாகுபலி படம் நிறைவுற முழுவதுமாக நான்கு ஆண்டுகள் சென்றன. ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் கதைக்களத்துக்கும், ‘பாகுபலி’ படத்தின் கற்பனைக்கும் அதிக வேறுபாடுகள் காணப்படுகின்றன.

கல்கி எழுதிய இக்கதையின் சினிமாவுக்காக காட்சியமைப்புகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்யலாமே தவிர, கதையில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது.

‘பாகுபலி’யில் பாகுபலி செய்த சில வீரதீர செயல்களைப் போல் பொன்னியின் செல்வனில் காட்சிப்படுத்தினால், அதன் இயற்கையான தன்மைகள் சிதைவடையும். மேலும், ‘பொன்னியின் செல்வன்’ படப் பணிகளை ஆரம்பித்த காலத்தில் கொரோனா தலைவிரித்தாடியது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் 150 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டது. இந்நாவலில் வரும் ஈழநாடு சம்பந்தப்பட்ட சில காட்சிகளை இலங்கையில் தம்புள்ள, அநுராதபுரம், பொலன்னறுவை, மிஹிந்தல போன்ற சரித்திரம் நிறைந்த நிகழ்வுகள் கொண்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த மணிரத்னம் திட்டமிட்டிருந்தார்.

கொரோனா காலகட்டம் என்பதால் இத்திட்டம் கைவிடப்பட்டு, பின்னர் தாய்லாந்தில் சில இடங்களை இலங்கை நகர்களாக உருவகித்து, படப்பிடிப்பு செய்யப்பட்டது.

பத்தாம் நூற்றாண்டில் இருந்த தம்புள்ள நகரையும், அன்று வாழ்ந்த மக்களின் இயல்பான வாழ்க்கை முறைகளையும், பௌத்த விஹாரைகளையும், பௌத்த துறவிகளையும் சித்திரித்த விதம் இயற்கையாகவும் தத்ரூபமாகவும் படப்பிடிப்பு செய்யப்பட்ட விதம் அருமை.

படத்தில் இடம்பெற்ற சிங்கள வசனங்களும், சிங்களம் பேசி நடித்த நடிகர்களின் பங்களிப்பும் அருமை. குறிப்பாக, ஐந்தாம் மஹிந்த அரசனின் கதாபாத்திரத்தில் நடித்த இலங்கை கலைஞரான ஷேம் பெர்ணாண்டோ சில காட்சிகளில் வந்தாலும், தன் பணியை அழகாக ஆற்றியுள்ளார்.

அன்னப்பறவை வடிவில் அமைக்கப்பட்ட படகில் குந்தவையும் வந்தியத்தேவனும் சந்திக்கும் காட்சி ரம்மியமானது. அரண்மனை மற்றும் பாதாள அறைகளில் எரிகின்ற தீப்பந்த ஒளிகளில் படப்பிடிப்பு செய்யப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஆதிகாலத்தை நம் கண் முன் கொண்டு வந்துள்ளது.

அரண்மனைகள், கோட்டைக் கொத்தளங்கள், அகழி, அரண்மனை வாயில்கள், நந்தினியின் அந்தப்புரம், சுந்தர சோழனின் இருப்பிடம், ரகசிய சுரங்கம் போன்ற அரங்க நிர்மாணங்களும், சோழர் கால கலாசாரம் நிறைந்ததாக போடப்பட்ட செட்களும், கணினி வடிவமைப்புகளும் பொன்னியின் செல்வனுக்கு மிகுந்த வலு சேர்க்கின்றது.

ஈழத்தில் கடலும் அது சார்ந்த காட்சியமைப்புகளும், பூங்குழலியின் அறிமுகக் காட்சியும் பிரமாதம். ‘சைவம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக வரும் ஸாரா, குமரியாக தோன்றும் கட்டங்கள் மிருதுவானது. அடர்த்தியான மரங்கள் கொண்ட கானகத்தில் அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சிகள் படு அமர்க்களம். நந்தினியும் குந்தவையும் சந்தித்துக்கொள்ளும் சூழல் நிறைவு கொண்ட அமைப்பு.

போர்க்களம், காடு மேடு என அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன் மற்றும் சில கலைஞர்கள் குதிரைகளில் ஏறிப் பறந்து, சவாரி செய்யும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தன் கெமராவில் பதிவு செய்த லாவகம் ஆங்கிலப் படங்களின் ஒளிப்பதிவுக்கு நிகராக அமைந்தமை சபாஷ் போட வைக்கின்றது.

படத்தில் இடம்பெற்ற நடன வகைகள் கேரள மாநில கலாசாரத்தைக் கொண்ட கதகளி நடனத்தை பிரதிபலிக்கிறது. இருப்பினும், நடன இயக்குநர் பிருந்தாவின் கைவண்ணத்தில் உருவான நடனக் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. அந்தரத்தில் தொங்கியவாறு ஆடும் நடனம் அருமை. தமிழர் கலாசாரம் நிறைந்த ஆடல்களை படத்தில் பார்க்க முடியவில்லை. வந்தியத்தேவனாக வரும் கார்த்தியும், ஆழ்வார்க்கடியானாக வேடமேற்ற ஜெயராம் மட்டுமே இப்படத்தில் நகைச்சுவை ஊட்டுகின்றனர். கடலில் யானை மீதேறி புரியும் சண்டைக் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. பொன்னியின் செல்வனான அருள்மொழி வர்மன் சமுத்திரத்தில் மூழ்கியதும், வயதான வேடமேற்ற ஒரு பெண் (ஐஸ்வர்யா ராய்) கடலில் நீந்திச் செல்லும்படியான காட்சியுடன் படத்தின் முதல் பாகம் நிறைவுறுகின்றது.

இதன் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட விறுவிறுப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ‘பொன்னியின் செல்வனி’ன் ரசிகர்கள், அடுத்த 2023ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியவர்களாக உள்ளனர். இந்திய சினிமா வரலாற்றில் ‘பொன்னியின் செல்வன்’ கண்டிப்பாக சாதனை படைக்கும்.

– (THANKS:-www.virakesari.lk)

எஸ். கணேசன் ஆச்சாரி சதீஷ், கம்பளை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles