வண்ணாத்திவில்லு சேராக்குழி கடற்கரையோர பகுதியில் கடலாமையைக் கொன்று இறைச்சியை விற்பனை செய்வதற்கு கொண்டு செல்ல முற்பட்ட மூவர் வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினரினால் நேற்று(6) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கடலாமையை இறைச்சிக்காக கொள்ளப்படுவதாக புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் திணைக்கள உதவி ஆனையாளர் எரந்த கமகேவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள வலய உதவி பொறுப்பதிகாரி எம்.பி.எல்.எஸ் மாரசிங்க தலைமையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சுற்றிவளைப்பில் 21 கிலோ கிராம் கடலாமை இறைச்சி மற்றும் கடல் ஆமையின் ஓடு 361 கடல் ஆமை முட்டைகள் மற்றும் இறைச்சிக்காக பயன்படுத்திய கத்திகள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் வலய உதவி பொறுப்பதிகாரி எம்.பி.எல்.எஸ் மாரசிங்க தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் சேராக்குழி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட இறைச்சி மற்றும் ஆமையின் முட்டைகள் இறைச்சிக்காக பயன்படுத்திய கத்திகள் ஆகியவற்றை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கடல் ஆமை (Olive Ridley) ஒலிவ நிற இனத்தைச் சார்ந்தது எனவும் குறித்த கடலாமை இறைச்சிக்காக அதிகமாக கொள்ளப்பட்டு வருவதால் அழிந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.