வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புலிபாய்ந்தகல் பகுதியில் 2018 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில் வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தலைமறைவாகியுள்ள நபர் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு, பொதுமக்களிடம் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2018 மார்ச் மாதம் 16 ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புலிபாய்ந்தகல் பகுதி ஆற்றுப் பகுதியில் வவுனியா கணேசபுரம் பகுதியை சேர்ந்த மருதை சுதர்சினி என்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக வாழைச்சேனையை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் மத்திய கிழக்கு நாட்டில் வேலை செய்துவரும் நிலையில் வாழைச்சேனை யைச் சேர்ந்த 33 வயதுடைய இராமச்சந்திரன் சுசாந்தன் என்பவர் காதலித்து வந்துள்ளதாகவும் காதலனுக்கு அதிகமான பணத்தை வழங்கிய நிலையில் 2018 மார்ச் மாதம் 16 ஆம் திகதி விமானமூலம் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த போது அவளை காதலன் சென்று வாழைச்சேனை க்கு பஸ் வண்டியில் அழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் காதலனிடம் பணத்தை கேட்ட நிலையில் அவளை முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றிச் சென்று புலிபாய்ந்தகல் ஆற்று பகுதியில் வைத்து அவளின் தலையில் போத்தலால் அடித்து அவளை கொலை செய்துவிட்டு சடலத்தை அங்கு விட்டுவிட்டு காதலன் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.
இந்த கொலை தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எம்.எப். சந்திர குமார தலைமையில் பொலிஸ் சாஜன் கே. ஹாரூன் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேக நபரான படத்திலுள்ள வாழைச்சேனை யைச் சேர்ந்த 33 வயதுடைய இராமச்சந்திரன் சுசாந்தன் தொடர்பாக தகவல் ஏதேனும் தெரிந்தால் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு 065-2260500 எனும் தொலைபேசி இலக்கம் ஊடக அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களின் உதவியை போலீசார் கோரியுள்ளனர்.