Tuesday, January 21, 2025

நாட்டின் பாதுகாப்பு உணவு மற்றும் பொருளாதார பாதுகாப்பிலும் தங்கியிருக்கின்றது

நாட்டின் பாதுகாப்பு இராணுவத்தில் மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதார பாதுகாப்பிலும் தங்கியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் போஷணையை உறுதி செய்யம் நிகழ்ச்சி தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

உணவு பாதுகாப்பு மற்றும் போஷணையை உறுதி செய்யும் நிகழ்ச்சியை நடைமுறைப்படுத்தும்போது அரச பொறிமுறையில் ஏற்பட்ட வீழ்ச்சிக் காரணமாக ஏதேனும் பிரச்சினைகள் உருவாகுமாயின் அதனை சரிசெய்வதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் தலையிடுவதற்குத் தயார் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கூடாக விவசாயத்தை நவீனமயப்படுத்தல் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை இயற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“எந்தவொரு பிரஜையும் உணவின்றி பசியால் வாடக்கூடாது” என்ற தொனிப்பொருளில் உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்வதற்கு கிராமிய பொருளாதார மேம்பாட்டு மையத்தை பலப்படுத்தும் பல் துறைகளின் ஒன்றிணைந்த பொறிமுறையொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின்பேரில் அண்மையில் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அவ்வேலை திட்டத்தின் மாவட்ட மட்ட முன்னேற்றம் தொடர்பில் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் கிராம மட்டத்தில் கிராமிய பொருளாதார மேம்பாட்டுக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்வதற்கு பல்வேறு வேலைதிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ற வகையில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் தடைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன்போது, எரிபொருள் மற்றும் தேவையான உரத்தை பெற்றுக் கொள்வது தொடர்பிலும், காணிப்பிரச்சினை, விதைப் பற்றாக்குறை, வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் மாவட்டச் செயலாளர்களால் முன்வைக்கப்பட்ட முன்னேற்றங்கள் குறித்து அவதானம் செலுத்திய ஜனாதிபதி, உணவுப் பாதுகாப்பை உருவாக்குவதற்கும், கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கைகளை தனித்தனியாக இனங்காணுவதற்குமென உணவுப் பற்றாக்குறை நிலவுகின்ற பிரதேசங்களை இனங்கண்டு அது தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் மாவட்டந்தோறும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் உணவு வங்கி (food bank) மற்றும் சமூக சமையலறை (Comunity kitchen) ஆகிய வேலைத்திட்டங்களை செயல்படுத்த திட்டமிடுமாறும் தெரிவிக்கப்பட்டது.

அரச சேவையில் தற்போது தேவைக்கு அதிகமானவர்கள் இருப்பதால் அவர்கள் அனைவரையும் இந்த வேலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, முப்படை வீர்ர்கள், சிவில் பாதுகாப்புப் படையினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

2023 ஆம் ஆண்டு வரை இத்திட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துமாறும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உலகப் பொருளாதார நெருக்கடிக்குத் தயாராகுவதற்கும் மக்களின் போஷாக்கு தேவையை உறுதிப்படுத்துவதற்கும் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

மூன்று வாரங்களின் பின்னர், வாரத்திற்கு ஒருமுறை இவ்வேலைத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்பிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles