வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 73 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று புதன்கிழமை (12) காலை 9.45 மணி அளவில் மன்னார் பஜார் பகுதியில் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கான இணையத்தின் ஒழுங்கமைப்பில் அதன் மாவட்ட இணைப்பாளர் சகாயம் திலீபன் தலைமையில் இடம்பெற்றது.
ஒலி வடிவில் கேட்க:-RADIO MANNAR
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 73 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மேற்படி மன்னாரில் இடம்பெற்றது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அங்கத்துவ அமைப்பின் இணைப்பாளர் பிரசாந்த் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது இளைஞர்கள், பொது மக்கள்,சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.