இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்துள்ள 29ஆவது வருடாந்த பாடசாலைகள் வலைபந்தாட்ட இறுதிச் சுற்ற காலி, தடல்ல விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதிவரை 3 தினங்கள் நடைபெறவுள்ளது.
கல்வி அமைச்சின் வழிகாட்டலில் இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கம் நடத்தும் இப் போட்டியின் முன்னோடி சுற்றுகள் பிராந்திய ரீதியில் 15 நிலையங்களில் நடத்தப்படுவதாக அகில இலங்கை பாடசாலைகள் மைலோ கிண்ண வலைபந்தாட்டப் போட்டி தொடர்பாக கொழும்பில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னோடி சுற்றில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 400 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 4,000 வீராங்கனைகள் 4 வயது பிரிவுகளில் விளையாடுவதாக இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கத் தலைவி நிரோதா அபேவிக்ரம தெரிவித்தார்.
15, 17, 19 ஆகிய வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகள் இரண்டு பிரிவுகளிலும் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டி தனிப்பிரிவிலும் நடத்தப்படும்.
1000க்கும் மேற்பட்ட மாணவர்களைக்கொண்ட பாடசாலைகள் ஏ பிரிவிலும் 1000க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் பி பிரிவிலும் விளையாடுகின்றன.
15 நிலையங்களில் நடத்தப்படும் முன்னோடி சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் தெரிவு செய்யப்படும் அணிகள் இறுதிச் சுற்றில் விளையாட தகுதி பெறும் என நிரோதா அபேவிக்ரம குறிப்பிட்டார்.
ஏ பிரிவில் 13 வயதுக்குட்பட்ட 90 அணிகளும் 15, 17, 19 ஆகிய வயதுப்பட்ட 180 அணிகளும் பி பிரிவில் 15, 17, 19 ஆகிய வயதுக்குட்பட்ட 90 அணிகளுமாக மொத்தம் 360 அணிகள் இறுதிச் சுற்றில் விளையாடும்.
இதேவேளை, அகில இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டிகளுக்கு 29 வருடங்களாக தொடர்ந்து மைலோ அனுசரணை வழங்குவதையிட்டு பெருமை அடைவதாக நெஸ்ட்லே லங்கா பிறைவேட் லிமிட்டெட் கூட்டாண்மை, ஒழுங்குபடுத்தல் உதவி தலைவர் பந்துல எகொடகே தெரிவித்தார்.
‘பின்தங்கிய பிரதேசங்களில், கிராமிய மட்டங்களில், மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் அதி சிறந்த வலைபந்தாட்ட வீராங்கனைகளை உருவாக்கி தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பிரகாசிக்கச் செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டோ வலைபந்தாட்டத்திற்கு எமது நிறுவனத்தின் மைலோ அனுசரணை வழங்கப்படுகிறது. ஆசிய வலைபந்தாட்ட சம்பயினான இலங்கை அணியில் இடம்பெற்ற வீராங்கனைகள் அனைவரும் மைலோ பாடசாலைகள் வலைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றி முன்னேறியவர்கள் என்பது எமது நிறுவனத்திற்கு திருப்தியும் மகிழ்ச்சியும் தருகிறது’ என அவர் மேலும் தெரிவித்தார்.