சாள்ஸ் நிர்மலநாதன் MP குற்றச்சாட்டு
“தொல்பொருள் திணைக்களத்தை ஒரு சில பௌத்த பிக்குகள் தான் வழி நடத்துகின்றனர்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இவ்வி்டயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மகாவலி அபிவிருத்தி அதிகார சபை 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது முழுமையாக தமிழர்களது இன விகிதாசாரத்தை இல்லாதொழிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அதனை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கடந்த 1988ஆம் ஆண்டு மகாவலி எல் வலயம் வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்டு இன்று 34 வருடங்கள் முடிந்திருக்கிறது. அதில் வவுனியா, முல்லைத்தீவு என பல பிரதேசங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
தங்களது செயற்பாட்டின் காரணமாக வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களை அபிவிருத்தி என்ற போர்வையில் தென்பகுதி மக்களுக்கு வழங்கும் செயற்பாடு தொடர்ந்தும் நடைபெறுகிறது.
மகாவலி எல் வலயத்தால் இந்த இரண்டு மாவட்டங்களில் ஒரு தமிழருக்கு கூட காணி வழங்கப்படவில்லை. எனவே மகாவலி அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது ஒரு சாதகமான நிலை உள்ளது.கடந்த காலங்களில் விவசாய அமைச்சர் ஒருவராக இருப்பார். வனஇலாகா, வனஜீவராசிகள் அமைச்சர் வேறு ஒருவராக இருப்பார். ஆகவே சில விவசாயிகளின் பிரச்சினையில் இரண்டு அமைச்சுக்கள் தொடர்புப்பட்டிருக்கும்.
ஆனால் தற்போது விவசாயம், வனஇலாகா அமைச்சராக மகிந்த அமரவீரவே உள்ளார்.
விவாசாயிகளின் கோரிக்கையை ஒரு குழுவாக கொண்டு செல்லும் போது எமக்கு ஒரு சாதகம் இருக்கிறது.
அவர் ஒரு சில விடயங்களை பரிசீலிக்க கூடியவர். இதற்கு ஒரு கூட்டு முயற்சி சாதகமாக அமையும். விவசாயத்தையும், கால்நடையையும் பிரித்து பார்க்க முடியாது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஒரு கூட்டு முயற்சி எடுக்க வேண்டும்.
வனவிலங்குகளால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. செட்டிகுளத்தில் இவ்வாறான அதிக பாதிப்புக்கள் ஏற்படுகிறன.
வனஇலாகா, வனஜீவராசிகள், மகாவலி, தொல்பொருள் திணைக்களம் இந்த நான்கும் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை. தொல்பொருள் திணைக்களத்தை ஒரு சில பௌத்த அமைப்புக்கள் தான் வழி நடத்துகின்றனர்.
அமைச்சர் ஏதாவது கதைத்தால் அவரது தொகுதியில் உள்ள பிக்கு அது பற்றி கதைக்க வேண்டாம் என்கிறாராம். ஆகவே இன்றைய நிலமையை புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.