“இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக அறவழியில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உறுதியளித்துள்ளார்.
தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டை மாநில தலைமையகத்தில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இதன்போதே கமல்ஹாசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“போர், பொருளாதார நெருக்கடி, அரசியல் சூழல் காரணமாக இலங்கை வாழ் தமிழர்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி நிற்கின்றனர்.
மாகாணங்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் (தன்னாட்சி உரிமை) பெறுவதற்கும், தமிழர்களின் தனித்துவமான மொழி அடிப்படையில் தீர்வு அமைய வேண்டும் என்பதற்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது” என்று இந்தச் சந்திப்பின்போது சிறீதரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழர்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது பற்றிக் கவலை தெரிவித்த சிறீதரன் எம்.பி., மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இலங்கைக்கு வருகை தர வேண்டும் என்றும் கோரிக்கையும் விடுத்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக அறவழியில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று இதன்போது கமல் ஹாசன் உறுதியளித்துள்ளார்.
சந்திப்பின் இறுதியில் இலங்கையின் சமகால அரசியல் வரலாறு, பிரச்சினைகள் குறித்த ஆவணங்கள், புத்தகங்களைப் பரிசளித்து சிறீதரன் எம்.பி.விடை பெற்றுள்ளார்.
இதேவேளை, நக்கீரர் தமிழ் சங்கமும், தமிழ் வார இதழும் இணைந்து சென்னை, தி.நகரில் நடத்திய, ‘மேனாள் இந்திய குடியரசுத் தலைவர் கலாநிதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த தின தமிழ் விழாவிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.