Wednesday, January 22, 2025

(Video )“அரசியலமைப்பின் 20வது திருத்தமே நாட்டின் தற்போதைய சீரழிவுக்கு பிரதான காரணம்” – ரிஷாட் எம்.பி!

நாட்டின் தற்போதைய பொருளாதார சீரழிவுக்கும் மக்கள் பசி, பட்டினியால் வாடுவதற்கும், வீதிகளில் இறங்கி அன்றாடத் தேவைகளுக்காக போராடுவதற்கும் மூல காரணம் அரசியலமைப்பின் 20 வது திருத்தம் எனவும், சொந்த நலனை பாதுகாப்பதற்காகவே அவ்வாறான திருத்தத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் கொண்டு வந்தது எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இன்றைய தினம் (21) பாராளுமன்றில் அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

அரசியலமைப்பின் 22 வது திருத்த விவாதத்தில் பேச சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். அரசியலமைப்பின் 20 வது திருத்தம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டபொழுது எனக்கு பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நான் அப்பொழுது சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டேன்.

ஏனெனில், அப்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கம் என்மீது அநியாயமாக ஒரு குற்றத்தை சுமத்தி, என்னை சிறையில் அடைத்திருந்தது. அதாவது, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழ்ந்த மக்களை மன்னார், முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு வாக்களிப்பதற்காக, அரச வாகனத்தில் நான் அழைத்து சென்றதாகவே அவர்களின் குற்றச்சாட்டு இருந்தது. இவ்வாறான அபாண்டமான குற்றச்சாட்டிலிருந்து நீதிமன்றம் அண்மையில் என்னை விடுவித்து நிரபராதி என தீர்ப்பளித்தது.

என்னை கைது செய்து மின்சாரம் இல்லாத, நீர் வசதி இல்லாத ஒரு இருட்டறையில் அடைத்துவைத்தார்கள். பாய், தலையணை கூட இல்லாத நிலையில், நுளம்புக்கடிக்குள் இருக்க வேண்டிய ஒரு மோசமான சூழலை உருவாக்கினார்கள். நான் சிறையில் இருந்தபோது விடுக்கப்பட்ட கடுமையான அழுத்தங்கள் காரணமாகவே, என்னை பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அந்த சூழலில்தான் 20 வது திருத்தம் நிறைவேறியது.

கோட்டாபய அரசாங்கம், தமது அதிகார மமதையின் உச்சத்தை வெளிப்படுத்தியதன் காரணமாகவே, அவரது கட்சி இந்தக் குறுகிய காலத்தில் சின்னாபின்னமாகி, சீரழிந்து பல கூறுகளாக பிரிந்துகிடக்கின்றது. இந்த திருத்தத்தை அவர்கள் எதற்காக கொண்டு வந்தனரோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. 19 வது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரம் போதாதென்று, இன்னும் அதிகாரத்தைக் கூட்டிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும், சர்வாதிகாரியாக செயற்பட வேண்டும் என்று விரும்பிய நிலையிலும் அது நடக்கவில்லை.

20 வது திருத்தம் இந்த நாட்டுக்கு ஒரு சாபக்கேடு. அதன் விளைவுதான் இந்த நாடு இரண்டு வருட காலத்துக்குள் பொருளாதாரத்தில் சீரழிந்து, சுமார் 82 சதவீதமான மக்கள் பசியிலும் பட்டினியிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை தற்பொழுது ஏற்பட்டிருக்கின்றது. பல பில்லியன் டொலர் வெளிநாடுகளுக்கு கடன் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டிலே டொலர் இல்லை. எரிபொருள் இல்லை. இதனால் வாகனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகமே நடைபெறுகின்றது.

மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் வசதி இல்லை. விவசாயிகளும் மீனவர்களும் சீரழிந்துபோயுள்ளனர். ஜனாதிபதி எதேச்சாதிகாரமாக எடுத்த பிழையான விவசாயக் கொள்கையினால், நாட்டில் உற்பத்தி வெகுவாகக் குறைந்துவிட்டது. இவ்வாறான கஷ்டங்களுக்கு எல்லாம் 20 வது திருத்தமே அடிப்படைக் காரணமாக இருக்கின்றது.

இவ்வாறானதொரு திருத்தத்தைக் கொண்டுவந்து, நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றவுமில்லை. வெளிநாட்டுக் கடனை அடைக்கவுமில்லை. முறையான திட்டமிடலோ, சரியான கொள்கையோ இல்லாத கோட்டாவின் அரசாங்கத்தினால், நாடு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

இப்போது சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டியுள்ளது. 1991 ஆம் ஆண்டு இந்தியாவிலும் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டது. எனினும், அவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றார்கள். கைத்தொழில் துறையிலும் விவசாயத் துறையிலும் ஏனைய ஏற்றுமதி, இறக்குமதி துறையிலும் முறையான கொள்கைகளை வகுத்தனர். இதனால், அந்த நாடு தலைநிமிர்ந்து நிற்கின்றது. ஆனால், நமது நாட்டிலே ஆட்சிக்கு வருபவர்கள் சாகும்வரை ஆட்சியில் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். தமது கட்சியையும் குடும்பத்தையும் வளர்க்க வேண்டும் என்பதற்காக, இவ்வாறான அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை கொண்டுவந்தனர். அதன் விளைவையே நாம் அனுபவிக்கின்றோம்.

தற்போது இந்த நாட்டில் எவருமே முதலீடுகளை செய்ய விரும்புகிறார்கள் இல்லை. இருக்கின்ற வெளிநாட்டு நிறுவனங்கள் கூட மூடிவிட்டு செல்லும் நிலையிலேயே இருக்கின்றது. எமது நாடு எதிர்காலத்தில் கைத்தொழிற் துறையில் மிகமோசமான வீழ்ச்சியை அடையும் என எதிர்வுகூறப்படுகிறது. உள்நாட்டில் உள்ள கைத்தொழிற்சாலைகளை மூடவேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது. வரிகளை செலுத்த முடியாமல் மக்கள் திண்டாடுகின்றனர். வர்த்தகர்களில் பலர் நாட்டை விட்டுச் செல்லப் போவதாகக் கூறுகின்றனர்.

இந்த மோசமான நிலைக்கு கடந்தகால ஆட்சியாளர்களே காரணம். இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி, ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் வாக்குகளைக் கொள்ளையடித்தனர். குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தின் மீது குறிவைத்தனர். சஹ்றான் என்ற கயவனின் குண்டுத் தாக்குதல்களை முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி, முஸ்லிம் சமூகத்தை பாடாய்ப்படுத்தினர். எனினும், குண்டுத்தாக்குதலின் பின்னால் இருந்த சக்தி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள், துறைசார் நிபுணர்கள் என அனைவர் மீதும் பழி சுமத்தி, அவர்களை குறிவைத்து மோசமான பிரச்சாரத்தை முன்னெடுத்து, சிங்கள மக்களை ஏமாற்றி 69 இலட்சம் வாக்குகளை அபகரித்தனர். பின்னர், பொதுத் தேர்தலில் 62 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர்.

இவ்வாறன கபடத்தன செயற்பாடுகளினால்தான் அவர்களினால் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியவில்லை. ஜனாதிபதி, பிரதமர், முக்கிய அமைச்சர்கள் எல்லாம் மக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். நாட்டைப் பற்றி சிந்திக்காததினால்தான் இவ்வாறானதொரு இழிவான நிலைக்கு தள்ளப்பட்டனர். இனியும் இவ்வாறான நயவஞ்சகர்களிடம் மக்கள் ஏமாறக்கூடாது. பொதுச் சொத்துக்களை சூறையாட வரும் இவ்வாறான இனவாதிகளை மக்கள் அங்கீகரிக்கக் கூடாது. இவ்வாறானவர்களை அங்கீகரிக்கின்ற நிலையில் இருந்து மக்கள் மாறவில்லையாயின், இந்த நாடு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும்.

அரசியலமைப்பின் 22 வது திருத்தத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றது. சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுவதன் ஊடாக, தற்போதுள்ள மிக மோசமான நிலையிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கும், வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவியளிக்கும். அத்துடன், இந்த நாட்டில் வாழும் மக்கள் ஜனநாயகத்தை மதித்து நடப்பதற்கும் இது வழிவகுக்கும் என நம்புகின்றோம்.

எனவே, இந்த அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தைக் கொண்டுவந்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்களுக்கும், ஜனாதிபதி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்” என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles