இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கி இருந்த வீட்டை விற்று அதில் கிடைத்த பணத்தை கொடுத்து படகு மூலம் தனியொரு பெண்ணாக தனது குழந்தைகளுடன் தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கை பெண் தனுஷ்கோடி அருகே உள்ள மூன்றாம் மணல் திட்டில் படகோடிகள் இறக்கி விட்டு சென்றனர்.
மணல் திட்டில் தவித்த கொண்டிருந்த மூவரையும் மரைன் போலீசார் பத்திரமாக மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 184ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சியால் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.
தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் உணவின்றி தவித்து வருவதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் மரைன் போலீசார் விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர்களை பத்திரமாக மீட்டு அரிச்சல்முனை அழைத்து வந்து மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரைன் போலீசார் நடத்திய விசாரணையில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்த சாந்தி அவருடைய மகன் அஜந்தன் மற்றும் அவரது 11 வயது மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் ஒரு பைபர் படகில் தலைமன்னாரில் இருந்து புறப்பட்டு இன்று காலை சுமார் 7 மணி அளவில் தனுஷ்கோடி மூன்றாம் மணல் திட்டில்; வந்திறங்கியதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இலங்கை தமிழர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரித்துள்ளதால் கணவனை இழந்த சாந்தியால் குழந்தைகளை வைத்து கொண்டு வாழ வழியின்றி பட்டிணி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள தாங்கள் தங்கி இருந்த வீட்டை விற்று அதில் கிடைத்த பணத்தை கொடுத்து பைபர் படகில் தமிழகத்திற்;கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தார்.
மேலும் தங்களை அழைத்து வந்த படகு தனுஷ்கோடி மூன்றாவது திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், காலை முதல் உணவின்றி தவித்து வந்த நிலையில் அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரிய நிலையில்; எங்களை மரைன் போலீசார் பத்திரமாக மீட்டதாக தெரிவித்தனர்.
பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் இவர்கள் மூவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ந்தேதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 184 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.