உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை நடத்திய குழுவின் தலைவராக செயற்பட்ட சஹ்ரான் ஹாஷிமுக்கு இந்தியாவுடன் காணப்பட்ட தொடர்புகள் குறித்து மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோயம்புத்தூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காரில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் ஜமீஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த நபருக்கும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹாஷிமிற்கும் இடையில் தொடர்புள்ளதாக, இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேஸ்புக் வாயிலாக இவர்கள் இருவரும் தொடர்புகளைப் பேணி வந்ததாக இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூரில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் 11 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டு தாக்குதல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர் களுடன், தற்போது கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களும் தொடர்புகளைப் பேணி உள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
1998 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அந்தக் குண்டுத்தாக்குதல்களில் 46 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, ஜமீஷா முபின் என்பவர் மேலும் நான்கு பேருடன் சேர்ந்து கடந்த சனிக்கிழமை பொருள் ஒன்றை தூக்கிச்செல்லும் CCTV காணொளியை இந்திய ஊடகங்கள் ஔிபரப்பியுள்ளன.
ஜமீஷா முபின் உயிரிழந்த காரில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கும் வௌி நாட்டவர்களுக்கும் தொடர்புகள் இருக்கக்கூடும் என சந்தேகிப்பதாகவும் சம்பவம் தொடர்பாக விசாரணை யை இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்திய பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட, ISIS அமைப்புடன் நேரடி தொடர்புகளைப் பேணிய அசாருதீன் என்பவருடனும் ஜமீஷா முபின் தொடர்புகளைப் பேணியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டுத் தாக்குதலை முன்னெடுத்த குழுவின் தலைவரான சஹ்ரான் ஹாஷிமுடன் 2019 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே அசாருதீன் என்பவர் தொடர்புகளைப் பேணியுள்ளதாக இந்திய பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளதை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.