கடலோர மாவட்டங்களில் ஏற்படக்கூடிய எண்ணைக்கசிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் , எண்ணைக்கசிவு சம்பவம் ஒன்று இடம் பெறும் போது மாவட்ட ரீதியாக இயங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட வேண்டிய நடைமுறை தொடர்பில் தெளிவு படுத்தும் விசேட கலந்துரையாடல் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் உலக உணவு திட்டத்தின் அனுசரணையில் இன்று வியாழக்கிழமை(27) மன்னாரில் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் காணப்படும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கடற்படையினர்,விமானப்படையினர் சூழல் செயற்பாட்டாளர்கள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் உட்பட உயர் அதிகாரிகள்,ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் நாடளாவிய ரீதியில் காணப்படும் எண்ணைக்கசிவு தொடர்பான ஆபத்துக்கள் தொடர்பாகவும் அதே நேரம் எண்ணை கசிவு ஆபத்து ஏற்படும் போது சூழல் ரீதியாகவும் , அதே நேரம் கடல் சார்ந்து ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.

அதே நேரம் எண்ணைக்கசிவு சம்பவங்களினால் கடல் வாழ் உயிரினங்கள், கடல்,தாவரங்கள் என்பன பாதிக்கப்படுவது தொடர்பாகவும் அவ்வாறான பாதிப்புகளை எவ்வாறு அரச திணைக்களங்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தடுப்பது தொடர்பான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த செயற்திட்டம் இலங்கை முழுவதும் கடல் பகுதி சார்ந்த 14 மாவட்டங்களில் மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது