கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை இரவு 2 படகுகளுடன் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து சனிக்கிழமை 539 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவுக்கும்,நெடுந்தீவு க்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் 2 படகுகளை சிறைபிடித்தனர்.
அதிலிருந்த 15 மீனவர்களையும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா். தொடர்ந்து 15 மீனவா்களும் மன்னார் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா்.இதையடுத்து, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சாா்பில் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடா்ந்து கைது செய்வதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், படகுகள், மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்வது, செவ்வாய்க்கிழமை தங்கச்சிமடம் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவது, அதன் பின் அடுத்தகட்டப் போராட்டம் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து இன்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியிருக்கிறார்கள்.இதனால், இன்று திங்கட்கிழமை காலை மீன்பிடிக்கச் செல்லவில்லை.இதனால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.