Monday, July 14, 2025

முன்னாள் எம். பிக்களை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் : மணிவண்ணன்

கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணி வேட்பாளர்களின் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த போதே வி.மணிவண்ணன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் தேர்தலானது நாடு முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தியல் காணப்படும் நேரத்தில் வரும் தேர்தலாக காணப்படுகிறது.

இதுவரை காலமும் மக்களால் கருத்தில் எடுக்கப்படாத தேசிய மக்கள் சக்தி என அழைக்கப்படும் ஜே.வி.பி. தென்னிலங்கையில் தனது ஆதரவை பெருக்கி ஆட்சியமைத்திருக்கிறார்கள். அதன் ஊடாக தென்னிலங்கை மக்கள் ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார்கள். நாட்டை பழுதாக்கிய பழைய ஆட்சியாளர்களை துடைத்தெறிந்து புதிய நேர்மையான ஆட்சியாளர்களையும் ஊழலற்ற அரசியல் கலாசாரத்தையும் உருவாக்க வேண்டும் என்ற செய்தியை நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை மக்கள் சொல்லியிருக்கிறார்கள்.

தெற்கில் பல மூத்த அரசியல் தலைவர்கள் போட்டியிடுவதில் இருந்து விலகியிருக்கிறார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் இன்னமும் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கையில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்பவர்களாக இருக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் யாழ் மாவட்டத்தில் இம்முறை போட்டியிடவில்லை. விக்னேஸ்வரனை தவிர ஏனைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் போட்டியிட வேண்டும் என்கிற பேரவாவில் இருக்கின்றனர். ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களை பார்த்தால் கடந்த 15 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு எதையுமே சாதித்திராத நபர்களை கொண்ட அணிகளாக காணப்படுகிறது.

தென்னிலங்கையில் மக்கள் வெளிப்படுத்திய பிரதிபலிப்பை மீண்டும் உணராதவர்களாக உள்ளனர். என்னைப் பொறுத்தவரை தமிழ் அரசியலிலும் இந்த பண்பியல்பு மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து அவர்களுக்கு ஓய்வை வழங்கவேண்டும். புதிய இளைய ஆளுமைகளை தமிழ் மக்கள் தங்களது பிரதிநிதிகளாக தெரிவு செய்து இம்முறை பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். இங்கும் அரசியல் சூறாவளி, அரசியல் மாற்றம் ஏற்படவேண்டும்.

அதற்காக கற்றறிந்த இளைஞர்களையும் பெண்களையும் இந்த தேர்தலில் களமிறக்கியிருக்கின்றோம். இதற்கான பேராதரவை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக வழங்கவேண்டும்.

தமிழ் மக்கள் இதனை ஏற்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை காணப்படுகிறது. தமிழ் மக்களின் நம்பிக்கையை வீணடிக்காத வகையில் பாராளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பேசியவர்களை பொருளாதார உரிமைகள் பற்றி பேசக்கூடாது என்பதையும் தமிழ் மக்களின் பொருளாதார உரிமைகள் பற்றி பேசுபவர்கள் அரசியல் உரிமைகளை பற்றி பேசக்கூடாது என்பதை மலையேற்றி அந்த கட்சிகளையும் நபர்களையும் தூக்கி எறியவேண்டும்.

எங்களைப் பொறுத்தவரை தமிழ் மக்களுடைய ஒரு கண் உரிமையாக இருந்தால் மற்றொரு கண் பொருளாதார நீடிப்பாக இருக்கும். இரண்டையும் சமாதானமாக முன்னெடுப்பதாக இருக்கவேண்டும்.

கடந்த காலத்தில் எமது நிர்வாகத் திறனை தமிழ் மக்களுக்கு செய்து காட்டியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் யாழ் மாநகர சபை நாம் திறம்பட செயற்படுத்தினோம்.

45 உறுப்பினர்களை கொண்ட யாழ் மாநகர சபையில் வெறும் 10 உறுப்பினர்களை மாத்திரம் கொண்டு ஒரு சபையை வினைத்திறனாக கொண்டு நடத்தி எமது பிரதேசத்தை விருத்தி செய்யலாம் என்பதை காட்டினோம்.

எனவே தமிழ் மக்களிடம் மன்றாட்டமாக கேட்பது இதுவரை காலமும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அனைவரையும் நிராகரித்து புதிய இளைய ஆளுமைகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் – என்றார்.

குறித்த ஊடக சந்திப்பில் ஏனைய வேட்பாளர்களான மிதிலைச்செல்வி சிறீ பத்மநாதன், உமாகரன் இராசையா, வரதராஜன் பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles