தமிழ்நாட்டில் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்த திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 03 ஆண்கள், 03 பெண்கள், 03 சிறார்கள் என ஒன்பது பேர் சட்டவிரோதமாக நாட்டுப்படகில் இலங்கை வந்தடைந்துள்ளனர்.
குறித்த நபர்கள், நேற்று மாலை புறப்பட்டு இன்று (10.11.2024) அதிகாலை நெடுந்தீவு அருகே கரை இறங்கியுள்ளனர். இந்நிலையில், இவர்கள் குறித்து தகவல் அறிந்த நெடுந்தீவு அரசு அலுவலர்கள், அவர்களை மாவிலித்துறை பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.மேலும், அவர்களுக்கு நெடுந்தீவு அரசு மருத்துவமனையில் முதலுதவி மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், நடுக்கடலில் இருநாட்டு கடற்படை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாட்டுப்படகில் இலங்கைத் தமிழர்கள் தப்பி வந்துள்ள சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மட்டத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.