நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு பெறுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும், தேர்தல் பிரசார அலுவலகங்கள் நாளை 12ஆம் திகதியுடன் அகற்றப்பட வேண்டுமென, தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைகளுக்காக அலுவலகங்களை செயற்படுத்தி வந்தனர். அந்த அலுவலகங்களில் தேர்தல் தொகுதி மட்டத்தில் முன்னெடுத்துச் சென்ற அனைத்து அலுவலகங்களும் 12ஆம் திகதி நள்ளிரவுடன் அகற்றப்பட வேண்டுமெனவும் அன்றையதினம் நள்ளிரவுக்கு பின்னர் அந்த அலுவலகங்களை நடத்திச் செல்ல முடியாதெனவும் அவர் தெரிவித்தார். எனினும் கட்சிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் குழுக்களுக்கு ஒரு தேர்தல் தொகுதிக்கு ஒன்று என்று அடிப்படையில் அலுவலகங்களை வைத்திருக்க முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.
அதேபோன்று வேட்பாளரின் வீடு தேர்தல் பிரசார அலுவலகமாக செயற்பட்டு வந்திருந்தால் அதனைத் தொடர்ந்து அதே விதத்தில் முன்னெடுத்துச் செல்ல முடியுமெனவும் எவ்வாறெனினும் அந்த அலுவலகங்களிலும் பிரசார நடவடிக்கைகளோ அல்லது போஸ்டர், விளம்பர ரீதியான பிரசாரங்களோ முன்னெடுத்துச் செல்ல முடியாதெனவும், அவர் தெரிவித்தார்.