சீரற்ற வானிலை காரணமாக கடந்த 7ஆம் திகதி முதல் நாகபட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கப்பலில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்த பயணிகளின் முழுக் கட்டணமும் மீளவும் அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக, இந்திய கப்பல் சேவை தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார்.
கடந்த 8ஆம், 9ஆம், 10ஆம் திகதிகளில் மழையுடனான வானிலையால் கப்பல் சேவையை முன்னெடுக்க முடியாதிருந்ததாகத் தெரிவித்த அவர், இந்நிலையில் இம்மாதம் 16ஆம் திகதிக்கு மேல் தாம் முன்பதிவு எதனையும் மேற்கொள்ளவில்லையெனவும் குறிப்பிட்டார்.
சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக கப்பல் சேவை நிறுத்தப்படுவதற்கு முன்னராக சுமார் 150 இருக்கைகளுக்கு முன்பதிவு மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அவர் குறிப்பிட்டார்.
கடல் அலையின் உயரம் மற்றும் காற்றின் திசை முன்னறிவிப்புகள் கப்பல் பயணத்தை திட்டமிடுவதற்கு உதவுவதாகவும் பயணிகளை ஏற்றிச்செல்வதில் பாதுகாப்பு உள்ளதாதென்பதை தீர்மானிப்பதற்கு இலங்கை மற்றும் இந்திய வானிலை முன்னறிவிப்புகளுடன் Windy App செயலியையும் தாம் நம்பியுள்ளதாகவும், அவர் கூறினார்.
மேலும் வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதிக்குள் ஆரம்பிக்குமென்பதுடன், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி வருவதால் வடக்கு கடல் கொந்தளிப்பாக இருக்குமென்பது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதையும், அவர் சுட்டிக்காட்டினார்.