மன்னாரில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாயொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த விசாரணைகளுக்காக சுகாதார அமைச்சின் குழு மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
நேற்று முன்தினம்(18) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த 28 வயதான குறித்த இளம் தாய் பிரசவத்தின் போது ஏற்பட்ட மூச்சுத்திணறலால் நேற்று(19) உயிரிழந்துள்ளார்.
எனினும் வைத்தியர்களின் கவனக்குறைவால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக பெண்ணின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக நேற்றிரவு(19) அமைதியின்மையும் நிலவியது.
இந்த சம்பவம் குறித்து வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் வினவியபோது, உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த சம்பவத்தில் வைத்தியசாலையின் தரப்பில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருக்குமாயின் அது குறித்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தயாராகவுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.