இன்றைய தினம் (24.12)அதிகாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத முறையில் மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் இன்று (24) அதிகாலை தலை மன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் விசாரணையின் பின் பகல் 1 மணியளவில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 17 சந்தேக நபர்களும் முன்னிலைப்படுத்தப் பட்ட போது , 17 மீனவர்களையும் எதிர்வரும் 7 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.