நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பட்டிகள் இன்றைய தினம் எடுத்துச் செல்லப்பட்டது.
அந்த வகையில்,
மன்னார் மாவட்டத்தில் உள்ள 05 உள்ளூராட்சி சபைகளுக்குமான வாக்குப் பெட்டிகள் இன்று (05.05) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபை,மன்னார்,மாந்தை மேற்கு,நானாட்டான் ,முசலி ஆகிய பிரதேச சபைகள் உள்ளடங்களாக 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப் பெட்டிகள், மன்னார் மாவட்டச் செயலகத்திலிருந்து அரச அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில்
மன்னார் மாவட்டத்தில் உள்ள 114 வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து சபைகளிலும் 88 சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், 114 வாக்களிப்பு நிலைகளில் 91 ஆயிரத்து 373 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.