வங்காலை கடலுக்குள் மூழ்கும் அபாயம். அரச , அரசியல் தலைவர்கள் பார்வையாளராக இருக்க வேண்டாம்.
வங்காலை மக்கள்.
மன்னார் தென்கடல் அரிப்பால் கிராமம் விரைவில் கடலுக்குள் மூழ்கும் அபாயம் தோன்றியுள்ளதாகவும் இதற்கான அணைக்கட்டை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இதை அரச அதிகாரிகள், அரசியல் வாதிகள் வெறுமனே பார்வையிட்டு செல்வதை விடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என வங்காலை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மன்னார் வங்காலை கிராம பகுதியிலுள்ள தென்கடல் அரிப்பால் வங்காலை கிராமம் அழிவுப் பாதையை நோக்கி செல்வதாக இன்றல்ல நீண்ட காலமாக இக்கிராம மக்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்த கடலரிப்பு இன்றைய நிலையில் இவ்மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதை சுட்டிக்காட்டி வருவதால் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு வருகின்றனர்.இது தொடர்பாக இவ்வாழ் மக்கள் கருத்து தெரிவிக்கையில்
மன்னார் வங்காலை கடலுக்கு அக்கிராம மக்கள் தொழிலுக்குச் செல்வதென்றால் ஒரு சிறிய ஓடையைக் கடந்து செல்வது காணப்பட்டது.
இந்த ஓடையைத் தாண்டி சுமார் 300 அல்லது 350 மீற்றர் சென்றால்தான் கடற்கரையை அடைய முடியும்.
இதற்கிடையில் இதற்கிடையில் மணல் திட்டியும் காணப்பட்டது. ஆனால் இன்று கடல் அரிப்பால் மணல் திட்டி மற்றும் ஓடைகளைத் தாண்டி கடல் வெள்ளம் வங்காலை கிராமத்திற்குள் ஊடுறுவத் தொடங்கியுள்ளது எனவும்
அன்றே இந்த கடல் அரிப்பின் பாதிப்பை உணர்ந்து அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் பி.சூசைதாசன் அவர்களின் முயற்சியால் கடல் அரிப்பு எற்படா லண்ணம் சிறு அணை ஒன்று போடப்பட்டிருந்தது இதைத் தொடர்ந்து சிறு சிறு அணைகள் போடப்பட்டபோதும் இவைகள் தற்பொழுது மணலால் மூடப்பட்டள்ளதாகவும்; மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நேரத்தில் இந்த அணையை மேலும் விஸ்தரிக்க அன்று முயற்சி எடுக்கப்பட்டிருந்த பொழுது இனக் கலவரம் காரணமாக இந்த முயற்சி அன்று கைவிடப்பட்டது.
பின் இக்கிராம மக்கள் இந்த கடலரிப்பு பாதிப்பு தொடர்பாக உயர் மட்டங்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து கடந்த வருடம் (2024) யுஎன்டிபி நிறுவனம் இக்கடல் அணைக்கட்டுக்காக ஐந்து கோடியே 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கி இருந்ததாக தெரிவிக்கின்றனர்.
இந்த நிதி கடல் சுற்றாடல் பாதுகாப்பு திணைக்களத்தினூடாகவே மாவட்ட செயலகத்தினூடாக ஓதுக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் இந்த திட்டத்தை சரியான முறையில் முன்னெடுப்படாததால் இந்த பணம் திரும்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் இந்த பணத்தை திருப்பி எடுத்து இந்த திட்டத்தை முன்னெடுக்க முடியும் என இவ்வூர் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டது எனவும்
ஆனால ஒதுக்கப்பட்ட நிதியை மீளப்பெற்று இந்த கடலரிப்பு பாதுகாப்பு திட்டத்தை இப்பொழுது முன்னெடுக்கப்படும் நோக்குடன் இக்கிராம மக்கள் முயன்றுள்ளபோது முன்பு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டு 2 கோடியே 46 இலட்சம் ரூபா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும்
ஆனால் இந்த நிதியும் குறிப்பிட்ட காலத்தில் இத்திட்டதிற்கு வெலவழிக்காவிடில் இந்த நிதியும் திரும்பிச் செல்லும் அபாயம் காணப்படுவதாக இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த கடலரிப்புக்கான அணைக்கட்டு முன்னெடுக்காவிடில் மன்னார் தென் கடல் வங்காலை கிராமத்திற்குள் விரைவில் உள்நுழைந்து கிராம மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் இச்சம்பவ இடங்களை பார்வையிட்டு வருகின்றபோதும் இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இவர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.