மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரஜைகள் குழு,சிவில் சமூக அமைப்புக்கள், மற்றும் மீனவர் சங்க அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் பங்கேற்று கோஷங்களை எழுப்பித் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
இன்று (11.06)புதன்கிழமை காலை 10.00 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்திலிருந்து
ஆரம்பமான குறித்த கவனயீர்ப்பு பேரணியானது மன்னார் நகரப் பகுதியைச் சென்றடைந்தது.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடி, பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
நிலையில் அங்கு வருகை தந்திருந்த மன்னார் மாவட்ட அரச அதிபரிடம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் வகையில்,மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
மன்னார் மக்கள்
முகம் கொடுத்து வரும் பிரச்சனைகள் அடங்கிய குறித்த மகஜர் மன்னார் மாவட்ட ஆயர் மேதகு ஞானப்பிரகாசம் அடிகளார் மற்றும் சர்வ மதத் தலைவர்களினால் மன்னார் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி மார்க்கஸ் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சிவில் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,சர்வமதத் தலைவர்கள்,அருட்பணியாளர்கள் வர்த்தகர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றனர்.