மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல முறைகேடுகள் மற்றும் பிணக்குகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள் என தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் தேசிய குழு உறுப்பினர் மார்க்ஸ் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (11.06) புதன்கிழமை, மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் மாநாட்டில் கலந்து கொண்டபின்னர்,
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் தெரிவித்த அவர்,
“இலங்கையின் வேறு எந்த மாவட்டங்களிலும் இல்லாதவாறு மன்னார் மாவட்டத்திலுள்ள அனேகமான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முறைகேடான வகையில் தங்கள் மேலதிகாரிகளால் நடத்தப்படுகிறார்கள் என்பதை இங்கு வந்த பின்பு தான் அறிந்து கொண்டோம்.
இங்குள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மிகவும் குறுகிய காலத்துக்குள்ளேயே தூர இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.குறிப்பாக மூன்று மாதம் ஆறு மாதம் மற்றும் ஒரு வருட காலங்களுக்குள்ளேயே இவ்வாறான இடம் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
அரச ஊழியர் ஒருவர் ஆகக் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது குறிப்பிட்ட இடத்தில் தொழில் புரிவதற்கு நியமிக்கப்பட வேண்டும்.அவ்வாறான கட்டமைப்புகளை கடந்து,இந்தக் குறுகிய கால இடமாற்ற முறைகேடுகள் இடம்பெறுகின்றன.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு கிராம அபிவிருத்தி அறிக்கை தயாரிப்பதற்காக,அரசாங்கத்தின் சுற்றறிக்கை ஊடாகப் 10,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மன்னார் மாவட்டத்தில் 5000 ரூபாய்க்குள் அந்த அறிக்கையைத் தயாரித்து தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிக்கப்படுகிறார்கள்.
அரச சுற்றறிக்கை ஊடாக அபிவிருத்தி உத்தியோதர்களுக்கு வழங்கப்படுகின்ற 10,000 ரூபாயை பெற்றுக் கொள்ளக்கூடிய உரிமை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இருக்கின்றது.
அவர்கள் கள நிலவரங்களை நேரில் சென்று ஆராய்ந்து அறிக்கைகளைத் தயாரிப்பதற்கான காகிதாதிகளை விலைக்கு வாங்கி அந்த பணிகளை முன்னெடுத்து வருவதால் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 10,000 ரூபாவையும் வழங்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முகாமைத்துவ முகாமையாளர்களின் வேலைகளைப் பதிலீட்டுக் கடமையாகச் செய்யக்கூடிய ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.அந்த வகையில் வெளிக்கள உத்தியோகத்தர்கள் இங்கே கணக்குப் பிரிவிலும் ஏனைய நிறுவனப் பிரிவுகளிலும் வேலை செய்யக்கூடிய ஒரு நெருக்கடி நிலவுகின்றது.
இவற்றை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக உரிய அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெளிக்கள உத்தியோகத்தர்கள் என நியமனம் வழங்கப்பட்ட அந்த உத்தியோகத்தர்களுக்கு அலுவலகத்திற்குள் பணிகளை வழங்குவது என்பது ஏற்புடையதல்ல.
எனவே இது சம்பந்தமாக மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த வருடத்திலிருந்து கொடுபடாமல் இருந்த காரியாலய கொடுப்பனவுகளை எங்களின் தலையீட்டினால், கொடுப்பதற்கு அரசாங்க அதிபர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
நாடளாவிய ரீதியில் இன்று அரச ஊழியர்கள் பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். அண்மை காலத்தில் இடம்பெற்ற ஊதிய உயர்வானது, உயர் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் போன்றவர்களுக்கு மிகவும் சொற்பமான ஊதிய உயர்வினையே இந்த அரசாங்கம் வழங்கியிருக்கிறது.
இவ்வாறான முறைகேடுகளுக்கு எதிராகக் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உரிய அமைச்சுகள் மற்றும் திணைக்களப் பிரதானிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தும் இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடலுக்கான வாய்ப்பை கூட அவர்கள் பெற்றுத் தரவில்லை.
ஆனால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு என்று சங்கங்களை உருவாக்கி போராட்டங்களை நடத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையங்களின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கின்றார்கள்.
அதேபோன்று கல்வி சேவையில் ஆசிரியர்களின் சம்பள உயர்விற்காகக் களத்தில் நின்று போராடியவர்கள் இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர்களாக இருக்கின்றார்கள். எனவே இந்தப் பிரச்சினைகள் குறித்து அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதற்கான தீர்வினைப் பெற்று கொடுப்பது அவர்களுக்கொன்றும் சிரமமான காரியம் அல்ல. இவ்வாறான முறைகேடுகளை இல்லாமல் செய்து அரச ஊழியர்களுக்கு கவுரவமான முறையில் அவர்கள் வாழ்வதற்கு அவர்களுடைய ஊதிய உயர்வினையும் கடமை நிரல்களையும் சரியான முறையில் அமைத்துத் தர வேண்டும்.
இல்லாவிடில்,தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் என்ற வகையில், நாங்கள் அனைத்து தர அரச ஊழியர்களையும் இணைத்துக் கொண்டு எமது உரிமைகளுக்காக வீதிக்கு இறங்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவோம். அப்போது இந்த அரசாங்கம் எங்களைக் குறை கூற முடியாது என்பதையும் நாங்கள் இந்த இடத்தில் வலியுறுத்திக்கொள்கிறோம்.” என்றார்.
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விசேட மாவட்ட மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாநாட்டில்,
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முன்சிங்க, தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் துமிந்த நாகமுவ,தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் தேசிய குழு உறுப்பினர் மார்க்கஸ் பிரபாகர்,மன்னார் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத் தலைவர் விக்டர், மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.