மன்னார் செல்வநகர்ப் பகுதியிலே 15 வருடங்களாக வசித்து வருகின்ற மக்கள் நீண்ட காலமாகத் தங்களது காணிகளுக்கு உரிமங்களைப் பெற்றுக் கொள்வதில் சிரமம் மேற்கொண்டுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தி கட்சியினரிடம் கோரிக்கைகள் விடுத்திருந்தனர்.
அதற்கமைவாக இன்றைய தினம் (27.06) வெள்ளிக்கிழமை, தேசிய மக்கள் சக்தி கட்சியின் வன்னி, பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு மக்களின் காணிகளை நேரில் பார்வையிட்டதுடன் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். மக்களின் குறைகளைக் கேட்டறிந்த அவர், குறித்த,காணி உரிமம் தொடர்பில் மன்னார் மாவட்ட அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி யுள்ளதாகவும் மக்களுக்கு காணி உரிமங்களை விரைவில் பெற்றுக் கொடுக்க உரிய அதிகாரிகள் ஊடாக நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
குறித்த விஜயத்தின் போது மன்னார் மாவட்டப் பிரதேச செயலாளர் எம். பிரதீப், காணி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, மக்களின் கோரிக்கைக்கு அமைய இன்றைய தினம் மடு கல்வி வலயத்தைச் சேர்ந்த மன்னார் அடம்பன் மகா வித்தியாலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், அங்கிருக்கும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்தபின் , வலயக் கல்விப் பணிப்பாளரைச் சந்தித்து குறித்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாடியமை. சுட்டிக்காட்டத்தக்கது.