மன்னார் நகரப் பகுதியில் அமைந்திருந்த இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் உருவச்சிலை கடந்த வாரம் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த உருவச்சிலை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு இன்றைய தினம் (1.07) செவ்வாய்க்கிழமை 10.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில், இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சாள்ஸ் நிர்மலநாதன், கட்சியின் உறுப்பினர்கள்,மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,நகர சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மன்னார் நகர்ப் பகுதியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை கடந்த புதன்கிழமை (25.07) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டிருந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.